இலங்கையின் யாழ்ப்பாண காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்குச் செல்ல விரும்பிய 26 பயணிகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் அடங்கிய பயணிகள் குழுவினர் தங்கம் கடத்துவதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நேற்று மாலை (17) அன்று SG423 என்ற படகு புறப்படுவதற்கு முன், பயணிகளின் அடையாளம் மற்றும் அவர்களது பொருட்களைச் சோதிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். இந்த சோதனையின் போது, பயணிகளில் பலருக்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 26 பேரில், 17 இந்தியர்கள், மூன்று இலங்கை ஆண்கள் மற்றும் ஆறு இலங்கை பெண்கள் அடங்குவர்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி மேலதிக விசாரணை நடத்த இலங்கை சுங்கத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்த 26 பேரையும் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
