இலங்கை மருத்துவருக்கு நியூசிலாந்து அரசின் சிறந்த கௌரவம்

நியூஸிலாந்தில் வசிக்கும் முன்னணி இலங்கை விசேட மருத்துவ நிபுணர் கலாநிதி உதயங்கனி சமரக்கொடி, அந்நாட்டின் மிக உயரிய அரச கௌரவப் பட்டமான நியூஸிலாந்து அங்கத்துவ கௌரவத்தைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பிரித்தானிய மன்னரின் பிறந்தநாள் பாராட்டுப் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தின் நலனுக்காகவும், குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சைத் துறைக்காகவும் அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பாராட்டுப் பட்டியலில் 178 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இலங்கையைச் சேர்ந்த கலாநிதி உதயங்கனி சமரக்கொடி குறிப்பிடத்தக்கவர்.

நியூஸிலாந்து அரச மாளிகையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த கௌரவப் பட்டம் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இந்த பாராட்டுக்குரிய நபர்களின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு ஆகியவை நியூஸிலாந்தை மேலும் வலுவான, பாதுகாப்பான மற்றும் சிறந்த நாடாக மாற்றுவதற்கு பெரிதும் உதவியுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

கலாநிதி உதயங்கனி சமரக்கொடி நியூஸிலாந்தின் வைகாடோ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணராகவும், குழந்தைகளுக்கான சிறுநீரக நோய் விசேட மருத்துவராகவும் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி வருகின்றார். இவரது சேவை மற்றும் அர்ப்பணிப்பு நியூஸிலாந்து மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.