தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் படுகொலை வழக்கு தொடர்பாக லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு இணைத்தளமான ஐஓடிபிபி ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலின்படி, ராஜபக்ச குடும்பத்தினரில் ஒருவர் தினேஷ் ஷாப்டரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
தினேஷ் ஷாப்டர் ரணில் விக்ரமசிங்கவின் நண்பரான சந்திரா ஷாப்டரின் மகன் ஆவார். அவர் ஒரு பிரித்தானியப் பிரஜையாவார். இந்தக் கொலை நடந்து நான்கு வருடங்கள் கழித்தும் இன்னும் இதன் மர்மங்கள் அவிழ்க்கப்படாமல் உள்ளன. இதைப் பற்றி ஐஓடிபிபி தலைவர் அஜித் தர்மபால கூறுகையில், “மிகவும் நம்பகமான தகவலை உறுதிப்படுத்திய பின்னரே, நான் இதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துகிறேன்” என்றார்.
இந்தக் கொலை வழக்கை விசாரிக்க, சி.ஐ.டி டி.ஐ.ஜி பிரசாத் ரணசிங்கவுடன் இணைந்து விசாரிக்க, ராஜபக்ச விசுவாசியான எஸ்.எஸ்.பி பிரசாந்த நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் இந்த விசாரணைகளைச் செய்து தினேஷ் ஷாப்டரின் மரணத்தைத் தற்கொலை என்று கூறினார். இதற்கு மாறாக, ஷாப்டர் குடும்பத்திற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவரின் கோரிக்கையை அடுத்து ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு இது தற்கொலை அல்ல, ஒரு கொலை என்பதை நாட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் வெளிப்படுத்தினார்கள்.
ராஜபக்சர்களில் ஒருவர் இரண்டு பில்லியன் ரூபாய்க்காகத்தான் தினேஷ் ஷாப்டரைக் கொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. வாகனத்தின் பின் இருக்கைக்குச் சென்றுதான் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்கள். எனவே, இந்த கொலை குறித்த விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
