கல்வித்துறை சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட பல்வேறு நிறுவனங்களின் பிரதானிகள் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான தயாரிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் 06 ஆம் தரத்திற்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முழுமையான தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஐந்து தூண்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுக்களின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்கும் அவற்றின் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் கல்வி அமைச்சரின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்புகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் கருத்திற்கொண்டு 06 ஆம் தரத்திற்குரிய பாடத்தொகுதிகளை உரிய திருத்தங்களுடன் அச்சிடும் பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 06 ஆம் தரத்தின் முதலாம் தவணைக்குரிய அனைத்துப் பாடத்தொகுதிகளும் தற்போது அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாம் தவணைக்குரிய பாடத்தொகுதிகளுடன் சேர்த்து அவற்றை ஒரே நேரத்தில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.