பேரீச்சம்பழ அல்வா

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்த ஒரு சுவை என்றால் அது இனிப்பு மட்டும் தான். எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவை இவ்வாறு இனிப்பு சுவையில் செய்து கொடுத்தால் அவர்களும் தட்டாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவர்களின் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்தும் எளிதாக கிடைத்துவிடும்.

டாக்டர்களின் அறிவுரைப்படி தினமும் இரண்டு பேரீட்ச்சம் பழம் சாப்பிட்டால் உடம்பிற்கு தேவையான அயன் சத்து மற்றும் ஹீமோகுளோபின் லேவெல் சரியாக பராமரிக்கப்படும். ஆனால் குழந்தைகள் பேரீட்ச்சம் பழத்தை அப்படியே கொடுத்தால் சாப்பிடுவது கிடையாது. எனவே அதனை இப்படி இனிப்பான அல்வா போன்று செய்து கொடுத்தால் அவர்கள் தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இந்த பேரீச்சம்பழ அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் – கால் கிலோ,

முந்திரி – 20,

நெய் – 5 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் கால் கிலோ பேரீச்சம்பழத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் பேரீட்ச்சம் பழத்தில் இருக்கும் கொட்டைகளை மட்டும் தனியாக எடுத்து விட்டு, சதைப்பற்றுள்ள பகுதிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைக்க வேண்டும். பிறகு இட்லி தட்டில் கொட்டை எடுத்த இந்த பேரீட்ச்சம் பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். பிறகு இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 20 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.

நன்றாக வெந்த பேரீச்சம்பழங்களை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது அடிப்புறம் தட்டையான ஒரு பேன் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும்.

நெய் நன்றாக சூடானதும் அரைத்த வைத்துள்ள பேரீட்ச்சம் பழ பேஸ்ட்டை இதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோள மாவை எடுத்துக்கொண்டு, அதனுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த சோள மாவு கரைசலை பேரீச்சம் பழ பேஸ்ட்டுடன் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இவை நன்றாக கெட்டியாகும் வரை கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே சிறிது சிறிதாக நெய் ஊற்றி கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக முந்திரிப்பருப்பை பொடியாக உடைத்து, இவற்றுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பேரிட்ச்சம்பழம் அல்வா தற்போது தயார் .

Exit mobile version