இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம்.இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை பார்க்கலாமா ? அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து இரவு நேரங்களில் மொபைல் போன் பார்ப்பது உங்கள் தூக்கத்தை கெடுத்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி குறைந்த அலைநீளம் கொண்டது. இது கண்களில் வெகு நேரம் படும் போது கண்களில் உள்ள ரெட்டினா பகுதியை பாதிப்படையச் செய்கிறது.
தூங்க வேண்டிய சமயத்தில் தூங்காமல் மொபைலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்தையும் பாதிப்படையச் செய்கிறது. இந்த நீல நிற ஒளிகள் தூக்கமின்மை பிரச்சனை, கண் பார்வை குறைபாடு இவற்றை ஏற்படுத்தும் போது தானாகவே நீங்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறீர்கள்.
இந்த செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர்வீச்சுகள் மூளையை பாதிக்கின்றன. இரவில் சரிவர தூங்காமல் இருப்பது உங்கள் மூளை செயல்பாட்டை குறைக்கும், பகல் நேரங்களில் தெளிவாக சிந்திக்க முடியாது. நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் தடுமாறும்.
இருட்டான அறையில் அல்லது இருட்டான சுற்றுப் புறங்களில் மொபைல் போனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் நீல நிற ஒளி உங்கள் கண்களுக்கு வலியையும் சோர்வையும் கொடுக்கிறது. இதுவே நீங்கள் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தால் சீக்கிரமே கண் பார்வையில் நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்கள்.