தமிழகம் தேனி மாவட்டத்தை சேர்ந்த சினேகன் (வயது ) என்பவர் பாக்கு நீரிணையை இரு வழியாக நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை செய்துள்ளார்.
குறித்த சிறுவன் 2019ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனை முதல் இலங்கை தலைமன்னார் வரை நீந்தி கடந்து பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை பாக்கு நீரிணையை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்திய – இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் குறித்த சிறுவன் நேற்று திங்கட்கிழமை (28) மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து கடலில் நீந்த ஆரம்பித்து இரவு 09.55 மணிக்கு இலங்கை தலை மன்னாரை 7 மணி 55 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.
பின்னர் அங்கிருந்து இரவு 10.30க்கு புறப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை 9.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைந்தார். 19 மணி நேரம் 45 நிமிடத்தில் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்த் முதல் முறையாக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி மீண்டும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.
அவரை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த ரேஷன் அபே சுந்தர தலைமன்னார் முதல் தனுஷ்கோடி பின்னர் தலைமன்னார் வரை 28 மணி நேரம் 19 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சினேகன் முதன் முறையாக தனுஷ்கோடி முதல் தலைமன்னார் பின்னர் அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடி வரை இரு வழி நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
கடலில் நீந்தி வந்த சிறுவன் சினேகனை மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் நாகேந்திரன் வரவேற்றார்.
இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடல் பகுதியில் மெரைன் பொலிஸார் மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பலும் பாதுகாப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.