ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் ஒரு பகுதியாக கோவில்கள், மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு 3,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையினை எதிர்த்து எந்த வகையான அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கும் நோக்கில் இந்தப் பொலிஸார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள நந்த்புரி சுரங்கப்பாதையை 80 அடி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 134 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தலங்களை அகற்ற காலஅவகாசம் வழங்கப்பட்டது.
ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் நேற்று விரிவாக்க பணி நடக்கும் பகுதியில் உள்ள மசூதி, இரு கோவில்கள், ஆன்மிக கூட்ட அரங்கம், தர்கா போன்றவற்றை இடித்து தள்ளியது. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க, 3,000 பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 12:00 மணி முதல் இன்று நள்ளிரவு வரை, இணையதள சேவை, ‘மொபைல் போன்’ குறுஞ்செய்தி சேவை உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்கள், பிற டிஜிட்டல் தளங்கள் மூலம் வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தாலோ, வெறுப்புணர்வைத் தூண்டினாலோ, புரளியை பரப்பினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய்ப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெய்ப்பூர் பொலிஸார் அறிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிக்கையின்படி, எந்த வகையான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக்கொள்ள பொலிஸார் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.









































