வட அயர்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவமனை வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) தனது உறுப்பினர்களிடையே இத்தகைய வாக்கெடுப்பை கடந்த நான்கு வாரங்களாக நடத்தி வந்துள்ளது. சுயாதீன ஊதியக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 3.5 சதவீத ஊதிய உயர்வை மருத்துவர்களின் சங்கத் தலைவர்கள் நிராகரித்த பின்னர் இது நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின்படி, மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் 25 மற்றும் ஜூன் 29 ஆகிய இரண்டு தினங்களில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டங்கள் (Walk outs) நடத்தப்படவுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக முன்னரே திட்டமிடப்பட்ட அறுவைசிகிச்சைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும். எனினும், அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.









































