முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், அவர் கொழும்பு தேசிய வைத்தியச் சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் மிக முக்கிய புள்ளியாக இருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே 2019 ஆம் ஆண்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியில் வைத்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், “சதி செய்தல் மற்றும் குண்டுத்தாக்குதல்களுக்குத் துணை போதல்” ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த சுரேஷ் சலேவுக்கு மிகக் குறைந்த அளவிலான உணவே வழங்கப்பட்டதாகவும், அதுவும் தரையில் விரிக்கப்பட்ட செய்தித்தாள் ஒன்றின் மீது வைத்துப் பரிமாறப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த அவமதிப்புகளைத் தாங்கிக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று சலே தனது மகனிடம் வேதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.







































