இலங்கையில் கதிரியக்க சிகிச்சை சேவைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் காரணமாக சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகள் அத்தியாவசிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக சுகாதாரத் தொழில் வல்லுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், கதிரியக்கச் சிகிச்சைத் திட்டமிடலுக்குப் பயன்படுத்தப்படும் பழைய ‘சிடி சிமுலேஷன்’ (CT Simulation) இயந்திரம் கடந்த ஏப்ரல் 29 அன்று செயலிழந்த நிலையில் மே 21ஆம் திகதியளவில் புதிய ‘சிடி சிமுலேஷன்’ இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்ட போதிலும், அந்த இயந்திரம் நிறைய சிக்கல்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புற்றுநோயாளிகளுக்கு அத்தியாவசிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் சங்கம் அரசிடம் கதிரியக்க சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியுள்ளது.
இந்த நெருக்கடியில் பாதிக்கப்படும் புற்றுநோயாளிகள் கடந்த ஆண்டு நோயறிதல் மற்றும் சிகிச்சைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











































