உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னறிவிப்பு கிடைத்திருந்தும், அது குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த வினவினார். இது தொடர்பாக, கொழும்பு – லண்டன் போன்ற வான்வழிப் பாதைகளைத் தனியாருக்கு வழங்கி, கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் தொடர்ச்சியாகத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன்போது, அந்தப் பிரிவுகளின் பிரதான நாற்காலிகளில் இருந்தவர்களே இன்றைய விசாரணைப் பிரிவுகளிலும் இருக்கிறார்கள்.
இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிந்திருந்தும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தகவல் தெரிவிக்கப்படாதது குறித்து அனுருத்த கேள்வி எழுப்பினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதற்கு பெரும் காரணமாக இருந்தவர்கள் தற்போதும் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது தவறு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் இப்போது சுரேஷ் சலேயையும், கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய முற்படுவதன் மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும், உண்மையான குற்றவாளிகளை விசாரிக்காமல் மக்கள் மத்தியில் வேறு ஒரு சித்திரத்தைக் காட்ட முனைகிறார்கள் என்றும் அனுருத்த குற்றம் சாட்டினார்.











































