தமிழகத்தில் சரும பராமரிப்பு என்பது ஒரு பழக்கமாக மட்டுமல்ல, பாரம்பரியமாகவும் இருந்து வருகிறது. மஞ்சள், கடலைமாவு, தயிர், சந்தனம் போன்றவற்றை வைத்து பேஷியல் செய்வது பலரின் சிறுவயது நினைவுகளோடு கலந்த ஒன்று.
இந்த பாரம்பரிய முறைகள் சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஒரளவிற்கு உதவுகின்றன. ஆனால் இன்றைய மாசு, மனஅழுத்தம், அதிக சூரிய வெப்பம், தூக்க மின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் உருவாகும் சருமப் பிரச்சினைகள் பழைய காலத்தை விட மிகவும் மாறுபட்டிருக்கின்றன.
அதனால், “வீட்டு வைத்தியம் மட்டும் போதுமா?” என்ற கேள்வி இன்று முக்கியமாகிறது. அதேபோல், ‘வெள்ளை நிற சருமம்தான் ஆரோக்கியம்’, ‘எரிச்சல் இருந்தால்தான் கிரீம் வேலை செய்கிறது’, ‘வீட்டு வைத்தியம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு’ என்பன போன்ற பல நம்பிக்கைகளும் இன்னும் மக்களிடையே இருக்கின்றன.
உண்மையில் இவை எந்த அளவிற்கு சரி? பாரம்பரிய பராமரிப்புக்கும் நவீன சரும சிகிச்சைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்? சருமத்திற்கு உண்மையில் என்ன தேவை? என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
தோல் நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், சருமத்தின் நிறம் முக்கியமல்ல; அது ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். சருமம் ஈரப்பதத்துடன் இருக்கிறதா, மென்மையாக இருக்கிறதா, அடிக்கடி அழற்சி அல்லது சேதம் ஏற்படுகிறதா என்பதுதான் உண்மையான அளவுகோல்.
தமிழர்களின் இயல்பான கருமை அல்லது மஞ்சள் கலந்த சரும நிறங்களும் மிகவும் அழகானதும் ஆரோக்கியமானதும் கூட. அதனால், சருமத்தின் நிறம் குறித்த தவறான பார்வையை மாற்ற வேண்டியது அவசியம்.
மஞ்சள், தயிர், கடலைமாவு போன்றவற்றைப் பயன்படுத்தி ‘பேஷியல் மாஸ்க்’ போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.











































