கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாகதெரிவித்துள்ளது.
நிரந்தர வாழிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம், முதன்மை விண்ணப்பதாரருக்கும் அவரது கணவன் அல்லது மனைவிக்கும் 500 கனேடிய டொலர்கள் ஆகும். அது ஏப்ரல் 30 முதல் 515 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெடரல் அதிதிறன்மிகு விண்ணப்பதாரர்கள், மாகாண நாமினி திட்டம் மற்றும் கியூபெக் திறன்மிகு பணியாளர்கள், அட்லாண்டில் புலம்பெயர்தல் வகுப்பு மற்றும் பெரும்பாலான Economic Pilots ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்போருக்கான கட்டணம் 825 டொலர்களிலிருந்து 850 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது.
அவர்களது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணமும் 850 டொலர்கள். அவர்களைச் சார்ந்த குழந்தைகளுக்கான கட்டணமும் 225 டொலர்களிலிருந்து 250 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், நிரந்தர வாழிட அட்டைகள், பயண ஆவணங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆவணங்கள் சான்றளித்தல் அல்லது புதிதாக மாற்றுதல் ஆகிய விடயங்களுக்கான கட்டணங்களில் மாற்றமில்லை.
2020ஆம் ஆண்டு முதலே, கனடா நிரந்தர வாழிட உரிமத்துக்கான கட்டணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வருகிறது. இந்த கட்டண உயர்வு கனடாவின் பொருளாதாரத்துக்கு பெருமளவில் உதவுவதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரும் தெரிவித்துள்ளார்.