கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்த தினம் நேற்று ஆகும் .1981ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நள்ளிரவுக்குப் பின்னர் இச்சம்பவம் நடைபெற்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் ஒட்டுமொத்த உதாரணமாகவே யாழ் நுலகம் தீக்கிரை யாக்கப்பட்ட சம்பவத்தை உலக நாடுகள் அந்நாளில் நோக்கின.
இலங்கையின் இனப் பிரச்சினையானது மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு யாழ். நூலக எரிப்பு சம்பவமும் காரணமாக அமைந்திருந்தது எனலாம்.
தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்மையான பொது நூலகமாக யாழ் நூலகம் விளங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் உலகின் வேறெந்த நூலகத்திலும் காணக் கிடைக்காதவை ஆகும்.
இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என்றெல்லாம் பல்வேறு துறை சார்ந்த மிகச் சிறந்த நூல்கள் அங்கே இருந்தன. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள கல்விமான்கள். அறிவுஜீவிகள், புத்திசாலிகள், பேரறிஞர்கள், நலன் விரும்பிகள் போன்றோரால் அன்பளிப்பு செய்யப்பட்ட சிறந்த நூல்கள் அங்கு இருந்தன.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள் 1800 களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அழிந்த புத்தகங்கள்
இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.
1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.
மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட”தமிழ் கலாசாரம்” எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.
நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழ் மக்களை மட்டுமன்றி, உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு.
நூலகம் எரிக்கப்பட்ட விதம், இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாத ரணத்தை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
யாழ். நூலகம் 1933ம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது குறிப்பிடத் தக்கது.