பிந்திய செய்திகள்

தடைகளை தகர்த்து சாதித்து கொண்டிருக்கும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!

வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்…
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் தான் மகளிர் தினம் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை. இந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன. நாட்டில் இயற்றப்பட்ட புரட்சிகர தீர்மானங்களும், சட்டத்திருத்தங்கள் மூலமான உரிமைகளையும் முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் முதல்படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ண்டிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கச்சூழலில் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்றால் அங்கே ஒரு கேள்விக்குறிதான். உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலாம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கிட்டியத‌ல்ல‌ என்று தான் நாம் சொல்லவேண்டும்.
உலக மகளிர் தினம் உருவான பின்னணியை சற்று பார்த்தால் இப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் சுதந்திரத்திற்கான தேடல் இருக்கும். பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமஉரிமை மையமாக வைத்து கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர். இதன் முடிவாக 1911, மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றம் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சமஉரிமை அளிக்கவேண்டும் எனப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஜக்கிய ராஜ்யம், ருஷ்யா போன்ற நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1917 வரை இவ்வாறான குரல்கள் ஒலித்து வந்தன.
1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர். இத்தகைய பெண்கள் போராட்டங்களால் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமை (gender equality as a fundamental human rights) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த நிலையில் 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள்ளேயே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதரை சிறை பிடிப்போம் என்ற மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் கவித்துவங்களில் அன்றைய கால தமிழ் பெண்களின் நிலைமையினை நன்றாக உணரமுடிந்த்து. இதற்கு மேலைத்தேய பெண்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்ற நிலையும் இருந்து வந்த்து. இந்த நிலையில் 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது.

ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் துயர சாகரத்துள் மூழ்கி கிடந்தனர். பின்னர் கொதித்தெழுந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். இங்கே பெண் வளம் ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தேறியது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜேர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை என்பது வருந்த்தக்கது. 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது பெண்கள் போராட்டத்திற்கு கிடைத்த்து மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்த்தக்கது. மென்மைக்கு ஒப்பானது தான் பெண்மை என்று சொல்லி சரித்திரத்திரத்தில் பெண்களின் திறமைகளை பல்வேறு இடங்களில் இருட்ட்டைப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட அதற்கு சற்றும் சளைக்காமல் அணு முதல் அண்டம் வரை தமது திறமைகளை நிலைநாட்டிய வண்ணமே அன்று முதல் இன்றுவரை பெண் இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்னை தெரேசா

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகஸ்டு 26, 1910 அன்று ஒட்டோமன் சாம்ராஜ்யத்தின் அஸ்கப் என்ற அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட மேசிடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜி)இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார். 1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளராக பிற்காலத்தில் உருவெடுக்கப் போகும் சபையை துவக்க தெரெசாவுக்கு அனுமதி கிடைத்தது.
“உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப்படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே தன் வாழ்க்கையின் தலையாய கடமையாக எண்ணி வாழ்ந்த செம்மனச்செம்மல் தான் உலக மக்களின் அன்னை அன்னை திரேசா.
அடுத்ததாக பெனசீர் பூட்டோவை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தானில் மத்திய-இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார். பூட்டோ, தமது 35வது வயதில், 1988ல் முதன்முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார். பல இன்னல்களைச் சந்தித்த பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதம மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைப் போராளி வீரமங்கை குயிலி

தற்கொலைப் போராளிகளின் போராட்ட வடிவம் விஸ்வரூபம் எடுத்து இரண்டாம் உலகப் போரில் தான் என எழுதப்பட்ட வரலாறுகள் சான்று பகிர்கின்றது.
ஜேர்மனிக்கும் ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டம் தான் இதற்கான ஆரம்பமாக கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியர்களை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக ‘தற்கொலைப் போராளி’ உருவானார் என்றும் அந்த ஈகத்துக்குரிய வீரமங்கை குயிலி என்றும் வரலாறுகள் கூறுகிறது.
குயிலி பெண் என்பதால் மட்டுமல்ல, சேரியில் பிறந்தவர் என்பதாலும் வரலாற்றின் பக்கங்களில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்று மறைந்து நிற்கும் வரலாறுகள் கூறுகிறது. தமிழ்நாட்டின் சிவகங்கை மண்ணை அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விரட்டிட வீரமங்கை வேலு நாச்சியார் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே ஈந்து உலகின் முதல் தற்கொலைப் போராளியாய் அழிந்து போன குயிலியின் வீரம் கூட இரட்டடிப்பு செய்துள்ளார்கள் உலகில் தற்கொலைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில் தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் மனிதர்களிடையே, சரித்திரப் பெண்கள் சாதனைப்பெண்கள் என்று போற்றும் வரலாற்றில் குயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கிநின்றது. பெண்கள் நாட்டின் கண்கள் என்றால் அது வெற்றுப்பேச்சு அல்ல என்பதை குயிலி நிரூபித்துக்காட்டியுள்ளார்.

இதே போன்று புளோரன்ஸ் நைட்டிங்கேல்

நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்து வைத்தவர் என்பது பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்டது
விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்
துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்த்தோடு மட்டுமல்லாமல் தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்த பெண்மணியும் ஆவார்
1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் தோற்றுவித்த்தோடு. 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார்.
1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதைப்பெற்ற முதல் பெண்மணி புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரி கியூரி

மேரி க்யூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

மேரி கொல்வின்

எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின். பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும் லண்டனில்தான் அதிகமாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லிபியா அதிபர் கடாபிதான் இவர் முதன் முதலாகச் சந்தித்த நாட்டின் அதிபர். கடாபி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் சந்தித்தவர் மேரி கொல்வின். கொசாவா, ஜிம்பாப்வே, கிழக்கு தைமூர்… என எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கொல்வின் சென்றுவிடுவார். அதனாலேயே ‘போர்ச் செய்தியாளர்’ என்ற பட்டம் தாங்கினார். இதேபோன்று ”2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்துகொள்ள புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்தவர் தான் மேரி கொல்வின் என்ற பெண் ஊடகவியலாளர் என்பதை யாரலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது.
பொதுவாக, பெரும் பத்திரிகைகளில் ‘வார் ரிப்போர்ட்டர்’ என்று இருப்பார்கள். இராணுவம் எத்தகைய ஆயுதங்களை வைத்துள்ளது, என்ன மாதிரியான வெடிகுண்டுகள் வைத்திருக்கிறார்கள், ஒரு குண்டு எத்தனை கி.மீ. தாண்டிப் போய் வெடிக்கும், இராணுவத் தளபதிகளின் சாகசம் என்ன என்று எழுதி ‘வார் ரிப்போர்ட்டர்’ ஆனவர்கள் தான் அதிகம். ஆனால் முற்றுமுழுதாக மாறுபட்டவர் தான் மேரி கொல்வின். போர்ச் சூழலில் பலியாகும் பெண்கள், குழந்தைகள் படும் அவஸ்தைகள் மூலமாக ஆயுதங்களின் கோரத்தை எழுதுவதன் மூலமாக ‘அமைதி நிருபராக’ இருந்தவர்.
1999ம் ஆண்டு கிழக்கு தைமூர் போர்ச்சூழலில் 1,500 பெண்கள் தங்களது பிஞ்சுக் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்டபோது ஐ.நா. அமைப்புடன் பேசி அவர்களை மீட்கத் துடித்தவர் கொல்வின். கடைசியில், அவர்கள் அத்தனை பேரையும் காப்பாற்றவும் பகீரதப்பிரயத்தனம் செய்து வெற்றியும் காண்டார். 2000 ஆம் ஆண்டில்தான் அவரது பார்வை இலங்கைப் பக்கமாகவும் திரும்பியது. நேரடியாக ஈழம் வந்த மேரிகொல்வின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேரிகொல்வினின் இடது கண்ணின் பார்வை முற்று முழுதாக பறிபோனது.

எத்தனையோ மிரட்டல்களைச் முகங்கொடுத்தும் சற்றும் சளைக்காதவராய் மேரி கொல்வின் அடுத்த பணியை செவ்வனவே செய்ய சிரியாவில் கால்பதித்தார்.. இலங்கையைப் போலவே சிரியாவும் மேரி கொல்வினனை மிரட்டியது. அந்த மிரட்டலைக் கூட கருத்திற் கொள்ளாமல் சிரியா நாட்டுக்குள் பிரவேசித்தவர் மேரி கொல்வின்.மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்​கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்துபோன கொல்வினின் வாழ்க்கை, நம் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரமாக திகழுமென்றால் அது மிகையாகது.

இரோம் சர்மிளா

பகுஜன் சமாஷ் கட்சியின் தலைவர் மாயாவதியை இந்தியாவின் இரும்பு மங்கை என்று அவரது தொண்டர்கள் அழைக்கிறார்கள். இதைப்போலவே மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளாவையும் இரும்புப் பெண் என்று அம் மாநில மக்கள் அழைக்கிறார்கள். உண்மையில் இங்கு இரும்புப் பெண்யார்? இந்தியாவின் இரும்புப் பெண் மாத்திரமல்ல இன்றைய உலகின் இருப்பும் பெண்ணும் அவள்தான். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா. அவருக்கு இப்போது 42 வயதாகிறது. அவரது வாழ்வுக் காலத்தில் 15 ஆண்டுகள் உணவருந்தாமல் போராடிக்கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் பெரும் பசியோடு இருக்கும் சர்மிளாவின் கோரிக்கை தான் என்ன?
சர்மிளாவின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மணிப்பூர் மாநில, ஆயுதப் படைக்கு அளித்துள்ள, சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையினை முதன்மையாக வைத்திருந்தார் இரோம் சர்மிளா. உண்ணா விரதப் போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாள் இரோம் சர்மிளா கைதுசெய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்றதாக காரணம் கூறப்பட்டடே அவர் கைதுசெய்யப்பட்டார். தற்கொலைக்கு முயலும் எவரையும் கைதுசெய்ய முடியும் என்ற இந்திய சட்டத்திற்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார் சர்மிளா. அடிப்படையில் சர்மரிளா ஒரு கவிஞர். மங்கோவி என மணிப்பூர் மக்களால் அறியப்பட்ட சர்மிளா இன்று வட கிழக்கு மாநில மக்களின் போராளியாக அந்த மாநிலத்தவரால் மங்கோவி என அழைக்கப்படுகிறார். பலமுறை சிறை, பல முறை விடுதலை, மீண்டும் சிறை. பலனில்லை. உண்ணாவிரதத்தைக் கைவிடவே இல்லை. சிறைச்சாலையிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டுபோய், மூக்கு வழியாக இரைப்பைக்கு குழாய் சொருகி, அதன் வழியாக, திரவ வடிவிலான ஆகாரத்தை உள்ளே செலுத்தினார்கள் இரோம் சர்மிளாவிற்கு … ஆனால் இலட்சியத்தை அடைவதற்கு முன்பே இறந்துவிடக் கூடாது என்பதற்காக, சர்மிளாவும், குழாய் வழியாக ஆகாரம் செலுத்துவதை எதிர்க்காமல் இருக்கிறார். அன்று முதல் இன்று வரை மருத்துவமனையில், பாதுகாப்பான அறையில் படுக்கவைக்கப்பட்டுள்ளார். சர்மிளாவின் உதடுகளில், ஒரு சொட்டு தண்ணீர் பட்டு, ஆண்டுகள் கடந்து விட்டது. உண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டு கொண்டே செல்வதால், சர்மிளாவின் உள் உறுப்புகள் பலமிழந்து விட்டன.

இவ்வாறு உலகவரலாற்றே திரும்பிபோட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்த அத்தனை பெண்மணிகள் எத்தனையோ பேர். அத்தனை பெண்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் சாதனைகளையும் ஒரு கணமாவது சிந்தித்துப்பார்க்கவேண்டியது ஒரு சமுதாயத்தின் தார்மீக கடமையாகும். பெண்கள் சம உரிமைக்காக எத்தனையோ பெண்கள் போர்க்கொடி ஏந்தி போராடி இருந்தாலும் கூட சமுதாய ரீதியாகவும் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் இன்று வரை முடக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். இதற்கு எடுத்துகாட்டாக எத்தனையோ செய்திகளை அன்றாட வாழ்க்கையில் பெண்கள் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு எத்தனையோ பெண்கள் முன்னுதாரனமாக வாழ்ந்துகாட்டியிருந்தாலும் கூட இன்னும் இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறி இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts