அமெரிக்கா செல்லும் முயற்சியில் கனடா எல்லையில் பனியில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் கனடாவிலேயே முன்னெடுக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
பிஞ்சு குழந்தை உட்பட நால்வரின் சடலங்களையும் ஒன்றாக பார்ப்பது அவர்களின் வயதான பெற்றோர் உட்பட குடும்பத்தினருக்கு மிகுந்த துயரத்தை அளிக்கலாம் எனவும்,
மட்டுமின்றி, தற்போதைய சூழலில் கனடாவில் இருந்து அவர்களின் சடலங்களை இந்தியாவுக்கு கொண்டு செல்வது என்பது அதிகச் செலவாகும் என்பதால், அதை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கனடா எல்லையில் பலியான இந்தியர்களின் பெயர்களை உத்தியோகப்பூர்வமாக வியாழக்கிழமை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜகதீஷ் பட்டேல் குடும்பம் ஜனவரி 12ம் திகதி ரொறன்ரோவுக்கு பயணப்பட்டுள்ளனர்.
ஏழு நாட்களுக்குப் பிறகு, இவர்களின் பனியில் உறைந்த உடல்கள் கனடா எல்லையில் இருந்து சில மீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. அதே நாளில் இன்னொரு ஐவர் குழு ஒன்றும் எல்லை பாதுகாப்புப்படையினரிடம் சிக்கினர்.
அனைவருமே பெருமளவு தொகை விசாவுக்காகவும், கட்டணமாகவும் செலுத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் ஜகதீஷ் பட்டேல் குடும்பத்தினர் 15 நாட்கள் துக்கம் அனுசரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். கனடாவில் வின்னிபெக் பகுதியில் வெள்ளிக்கிழமை சிறப்பு அஞ்சலி கூட்டம் ஒன்றையும் இந்திய சமூக மக்கள் முன்னெடுத்துள்ளனர்.