லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கும் வணிகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் கனடா தலைநகர் ஒட்டாவா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.
மேலும், லொறி சாரதிகளுக்கு கிடைக்கப்பெறும் பொருளதவிகளையும் பொலிசார் தடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிறன்று மதியத்திற்கு மேல் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டு வாரங்களாக லொறி சாரதிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தால், ஒட்டாவா நகர குடிமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனாலையே, ஒட்டாவா நகரில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த முடிவால் பொதுமக்கள் தயக்கமின்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்பதுடன், முன்கள ஊழியர்களுக்கு தேவையான கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் வாங்க உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜிம் வாட்சனின் இந்த முடிவால் தலைநகரில் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் இரண்டாவது வாரத்துடன் முடிவுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஞாயிறன்று இரவு பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுக்க துவங்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான உதவிகளை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அவர்களுக்கான எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் இருவரையும் கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் நகரில் குவிக்கப்பட்டுள்ள 500 வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது தேவையான பொருட்களை கொண்டு வருபவர்களை அடையாளம் காண நேர்ந்தால் அவர்களை கைது செய்யப்போவதாக பொலிசார் முந்தைய நாள் அச்சுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.