பிந்திய செய்திகள்

தந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற மகன்

வளசரவாக்கம், ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி தாட்சாயி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் குணசேகரன். மகள்கள் காஞ்சனா மாலா, யமுனா, பிரமிளா. இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கணவரை இழந்த மூத்த மகள் காஞ்சனா மாலா, வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் 2வது தளத்தில் தந்தை குமரேசனுடன் வசித்து வந்தார். அதே வீட்டில் உள்ள முதல் தளத்தில் குமரேசனின் மகன் குணசேகரன் மனைவி மற்றும் 2மகன்களுடன் வசித்தார்.

இந்த நிலையில் காஞ்சனா மாலா, கடந்த 15ந் தேதி மந்தைவெளியில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது தந்தை குமரேசன் மட்டும் தனியாக இருந்தார். பின்னர் நேற்று மாலை காஞ்சனா மாலா திரும்பி வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறம் பூட்டிக் கிடந்தது. தந்தை குமரேசன் மாயமாகி இருந்தார்.

இதையடுத்து காஞ்சனா மாலா, கீழ்வீட்டில் வசிக்கும் தம்பி குணசேகரனுடன் வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தந்தை குமரேசனை தேடினார். அப்போது உடன் வந்த குணசேகரனும் திடீரென மாயமாகிவிட்டார்.

மேலும் அவரது செல்போனும் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த காஞ்சனா மாலா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் ரத்த கறையாக காணப்பட்டது.

மேலும் பயங்கர துர்நாற்றம் வீசீயது. இதனால் விபரீதம் நடந்து இருப்பதை உணர்ந்த காஞ்சனா மாலா இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

உதவி கமிஷனர் கலியன், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

குமரேசனை அவரது மகன் குணசேகரன் கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் எங்கே என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக தலைமறைவான குணசேகரனின் மனைவியிடம் போலீசார் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குணசேகரன் கடந்த 18ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், அருகே உள்ள சோளிங்கரில் உள்ள அவரது நண்பர் ஒருவரை பார்க்க சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது சோளிங்கர் வந்த குணசேகரன் காவேரிபாக்கம் பகுதியில் கடை கட்டுவதற்கு ஒரு இடம் பார்த்துவிட்டு சென்றது தெரியவந்தது.

மேலும் நேற்று காலை ஒரு மினி வேனில் மூடி போட்ட டிரம் மற்றும் மண்வெட்டியுடன் அதே இடத்திற்கு மீண்டும் குணசேகரன் வந்துள்ளார். இதுபற்றி அவரது நண்பர் கேட்டபோது “நீ இங்கிருந்து போ… நான் இடத்தை சுத்தம் செய்துவிட்டு வருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

தந்தை குமரேசனின் உடலை துண்டு, துண்டாக வெட்டி டிரம்பில் வைத்து எடுத்து வந்து குணசேகரன் அங்கு புதைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்துள்ளனர். குமரேசனின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

குமரேசன் கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. தந்தை, மகன் இடையே சொத்து பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக காஞ்சனா மாலா, மற்றும் குணசேகரனின் மனைவி வசந்தி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான குணசேகரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். குணசேகரன் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன? எப்படி கொலை நடந்தது? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது தெரியவரும்.

இந்த சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts