பிந்திய செய்திகள்

கணவர் முன் காட்டு யானை தாக்கி உயிரிழந்த மனைவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது43). டீக்கடைக்காரர். சம்பவத்தன்று காலை கடையை திறக்க சென்ற அவரை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் என்ற கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.

வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன், குடியிருப்பு பகுதி, தேயிலை தோட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் யானையின் நடமாட்டம் தெரியவில்லை. இருப்பினும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

ஓவேலி பாரம் பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்ற மாலு தனது கணவர் குஞ்சாலியுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை மும்தாஜை துதிக்கையால் தூக்கி சாலையில் போட்டு காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன் கண்முன்னே மனைவி யானை தாக்கி இறந்ததை பார்த்து அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டு கொண்டே ஊருக்குள் ஓடினார்.

அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, யானையை விரட்டினர்.

இதற்கிடையே தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் உடலை எடுக்கவிடமால் போராட்டம் நடத்தினர். இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் டீக்கடைக்காரர் ஆனந்தகுமார் பலியான நிலையில் நேற்று இரவு மீண்டும் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்துள்ளது, எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டை விட்டு வெளியில் வரவே அச்சமாக உள்ளது. இங்கு சுற்றி திரியும் யானையை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன், வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts