தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளராக டொனால்ட் லூ கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தியா, நேபாளம் மற்றும் மாலைதீவுகளுக்குச் செல்ல தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், தான் அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது கவனம் செலுத்தும் பகுதிகளை அவர் குறிப்பிடாத நிலையில், மனித உரிமைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் பட்டியலில் முதலிடம் வகிக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பரில் வொஷிங்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையுடனான கலந்துரையாடலின் போது டொனால்ட் லூ, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது டொனால்ட் லூ, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் கொள்கையை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.