உலகில் நாளுக்கு நாள் உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடலில் ரத்த ஓட்ட சீராக இருந்தால் தான் உடல் பாகமும் சீராக இயங்கும். அதனால் தான் காய்ச்சல், உடல் நல குறைபாடு என்று மருத்துவரை அணுகும் போதெல்லாமல் உடலில் ரத்த அழுத்தம் குறித்த பரிசோதனையும் செய்யப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தன் என்னும் நோயையே இன்னும் முழுமையாக உணராத அளவுக்கு மக்கள் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். இந்தியாவில் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் உயர் ரத்த அழுத்தம் என்னும் நோயை பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணரவே இல்லை என்பதும், அப்படியே நோய் இருப்பதை உணர்ந்தவர்களுக்கு அது குறித்த தீவீரம் தெரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
பலருக்கும் இந்நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதோ முறையாக மருத்துவ சிகிச்சை முக்கியம் என்பதோ குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்றே சொல்லவேண்டும். ரத்த அழுத்த நோயாளிகளில் குறைந்த சதவீதத்தினரே இதை கட்டுக்குள் வைக்க முறையான மாத்திரைகள், உணவு பழக்கங்களை பின்பற்றுகிறார்கள்.
ரத்த அழுத்தம் தரும் பிரச்சனை
ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். கொழுப்பு அதிகரிக்கும் போது இதயத்தமனிகளில் அடைப்பு உண்டாகி அவை இதய நோய் மாரடைப்பை உண்டாக்க பெருமளவில் வாய்ப்புண்டு. இன்று மாரடைப்பால் மரணம் அடையும் பலரும் தங்களது உயர் ரத்த அழுத்தத்தின் தீவிரத்தை உணராதவர்களே என்கிறார்கள் மருத்துவர்கள்.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியாமல் போகும் போது இதயத்துடிப்பு சீரற்று காணப்படும். சராசரியாக துடிக்க வேண்டிய அளவிலிருந்து இரண்டு மடங்கு துடிக்ககூடும். இவை தொடரும் போது ரத்த உறைதல் பிரச்சனையையும் ரத்த ஓட்டத்தில் அவை உடலில் ஆங்காங்கே சிதறும் நிலையும் உண்டாகும். அப்படி சிதறும் ரத்தம் எந்த உறுப்பில் சென்று அடைப்பை ஏற்படுத்துகிறதோ அதை பொறுத்து அந்த உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி மூளையில் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் போது பக்கவாதம் வருகிறது.
உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகி கொண்டே போனால் இதயத்தின் வெண்ட்ரிக்கல் சுவர் தடிமனாகி இதயத்தின் செயல் திறன் படிபடியாக குறையதொடங்கும். இதனால் இதய செயலிழப்பு வரை உண்டாககூடும் என்பதாலேயே இந்நோய் குறித்த விழிப்புணர்வும், அதை கட்டுக்குள் வைக்கும் சிகிச்சையும் அவசியம் என்பதை உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியது
ஆண்கள், பெண்கள் அனைவருமே இந்நோய்க்கு உள்ளாவது அதிகரித்துவருகிறது. பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்தை ஆரம்பத்தில் கண்டறிவது சிரமமானது என்பதால் 30 வயதை கடந்த அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவு இருந்தால் அது வழக்கமானது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்கு தள்ளும் போது உண்டாகும் அழுத்தம் இது. இதில் 80 என்னும் அளவானது டயஸ்டாலிக் அழுத்தம் இதயம் விரிந்து உடலில் இருந்து வரும் ரத்தத்தை பெற்றுகொள்ளும் போது உண்டாகும் அழுத்தம். இவை பொதுவானது என்றாலும் கூட உடல், எடை, உயரம் போன்றவற்றுக்கேற்ப வித்தியாசம் உண்டு.
உலக சுகாதார நிறுவனம் 100/70 மி.மீ முதல் 140/90 வரை உள்ள ரத்தத்தை இயல்பானது என்று வரையறுத்துள்ளது. இதன் அளவு அதிகரித்தால் அவை உயர் ரத்த அழுத்தம் என்றும், குறைந்தால் குறை ரத்த அழுத்தம் என்றும் வரையறுத்தது.
பரிசோதனையில் உங்களுக்கு ரத்த அழுத்தம் இல்லை என்பது உறுதியானால் நீங்கள் அதை தவிர்க்க வாழ்க்கை முறையிலும், உணவு முறையிலும் மாற்றங்களை கடைபிடித்தாலே போதுமானது.
உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிகரிக்கும் உடல் எடையால் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும் என்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் உயரத்துக்கேற்ற உடல் எடையை தக்கவைத்துகொள்வது அவசியம்.
உடல் உழைப்பில்லாமல் இருப்பதும் நோயை வரவேற்கும் என்பதால் தினமும் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உணவு முறையிலும் நிச்சயம் மாற்றம் தேவை. உணவில் உப்பின் அளவை குறைத்துகொள்ள வேண்டும். கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு உள்ள உணவுகள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்பனேட் குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவையும் தவிர்க்க வேண்டும். புகைப்பழக்கம், ஆல்கஹால் பழக்கத்தை இயன்றவரை கைவிட வேண்டும்.
இவை எல்லாம் தாண்டி மன அழுத்தம் உண்டாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் வயதான காலத்திலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும்.
கட்டுக்குள் வைக்க
பரிசோதனையில் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உறுதியானால் நீங்கள் அலட்சியப்படுத்தாமல் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.ரத்த அழுத்தம் உறுதியானால் கொழுப்பின் அளவையும் பரிசோதித்து கட்டுக்குள் வைக்க வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்காமல் இருந்தால் இதய பாதுகாப்பையும் அவ்வபோது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தோடு சர்க்கரை நோயும் இருந்தால் நீங்கள் இரண்டையும் நிச்சயம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
நீங்கள் புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தால் அதை கைவிடுவது நல்லது. தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும். உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் அலட்சியப்படுத்தகூடிய நோயல்ல, அசந்தால் ஆளைக்கொல்லும் நோய்!