இரத்தம் நம் உடலின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். அது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஆன்டிபாடிகளை கொண்டுச்செல்லவும், உடலின் வெப்பநிலையை சரியான விகிதத்தில் பராமரித்து, தேவையில்லாத கழிவுகளை சிறுநீரகம், கல்லீரலுக்கு எடுத்துச்சென்று, உடலை சுத்தம் செய்கிறது. அதனால்தான் நம் உடலின் எடையில் 7% இரத்தத்தினால் ஆனது. இரத்தத்தில் 45% சிவப்பு இரத்த அணுக்கள் நிறைந்து இருக்கிறது. மேற்கூறிய முக்கியமான வேலைகளை செய்ய, இரத்தத்தில் தேவையான சிவப்பு இரத்த அணுக்கள் குறையும் பொழுதோ அல்லது ஆக்சிஜனை எடுத்துச் செல்ல போதுமென்ற அளவு ஹீமோகுளோபின் இல்லாத பொழுதோ ஏற்படும் நிலை அனீமியா/இரத்த சோகை எனப்படுகிறது.
பொதுவாக, இரத்தசோகை, குறைந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தான் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். துரதிஷ்டவசமாக இது உண்மையல்ல. இங்கே உங்களுக்காக சில பொதுவான இரத்த சோகைக்கான ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிரிய தன்மை
பொதுவாக ரோஜா நிற கன்னங்களையுடைய குழந்தைகளுக்கு வெளிரிய, மஞ்சள் அல்லது சாம்பல் நிற தோல் மற்றும் கண்களும், இளஞ்சிவப்பு நிறமற்ற உதடுகளும், நகங்களும் இருந்தால் அக்குழந்தைகள் இரத்த சோகையால பாதிக்கப்பட்டிருக்கலாம். கண்களின் வெள்ளைப் பகுதியில் லேசான நீல நிற சுவடு இருப்பது மற்றொரு அறிகுரியாகும். இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இந்த மாற்றங்கள் மெதுவாகத்தான் தெரிய தொடங்கும் என்பதால், அதற்கான மற்ற அறிகுறிகளையும் காண்போம்.
நிலையான உடல் சோர்வு
இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர். அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம். கடினமான, உடல் உழைப்பு தேவைப்படும் எந்த வேலையையும் அவர்களால் செய்யவோ, ஓடி ஆடி விளையாடவோ முடியாது. சாதரணமாக படியேறுவதைக்கூட அவர்கள் மிகவும் சிரமமாக உணர்வார்கள்.
மாறான உணவு ஆசை
இயற்கையாகவே நம் உடலில் எதவாது சத்து குறைபாடு ஏற்பட்டால் அந்த குறைப்பாட்டை சரி செய்யும் விதமாக அது சம்பந்தப்பட்ட உணவுக்காக அடங்காத ஆசை ஏற்படும். அதனால் தான் குழந்தைகள் வினோதமாக களிமண், தூசி, சோளமாவு, ஐஸ் போன்றவைகளை உண்ண அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றனர். இது உடலில் ஏற்பட்டுள்ள இரும்புச்சத்து குறைபாட்டினால் கூட இருக்கலாம். இம்மாதிரி உணர்வை ஆங்கிலத்தில் ‘பிகா’ என்று கூறுகின்றனர்.
தாமதமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
தாமதமான வளர்ச்சி, நடத்தையில் பிரச்சினைகளான கவனக் குறைவு, குறையும் மோட்டார் திறன்கள், சமூக தொடர்பின்மை போன்றவை இரத்த சோகை சம்பந்தப்பட்டவை ஆகும். இவையனைத்தும் சேர்ந்து குறைந்த ஆற்றல் நிலை, மற்றும் கற்பதில் பிரச்சினை ஆகியவற்றிற்கும் இட்டுச் செல்லும்.
குணமடைவதில் தாமதம்
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காயங்கள், பழுதடைந்த திசுக்கள் குணமாக தாமதமாகும். உடல்நலக் குறைவு அடிக்கடி உண்டாகும். சிவப்பு இரத்த அணுக்களால் ஆன்டிபாடிகளை எடுத்துச் செல்ல முடியாததால் குழந்தைகளுக்கு எளிதாக தொற்று ஏற்படும். காயங்கள் குணமடைய தாமதமாகி, நாட்கணக்கில் காயங்களுடன் இருக்க வைக்கிறது.
மற்ற அறிகுறிகள்
இரத்தசோகையுடைய குழந்தைகளிடம் காணப்படும் மற்ற அறிகுறிகள் நாக்கில் வீக்கம், புண், எரிச்சல், தீராத தலைவலி, விரிவான மண்ணீரல்(ஸ்ப்லீன்), மஞ்சட்காமாலை நோய் மற்றும் தேநீர்- நிற சிறு நீர் போன்றவை ஆகும்.