இந்தியாவில் சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.
அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.91 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.2,040 ஆக இருந்தது. அவற்றின் விலை ரூ.91 குறைக்கப்பட்டதன் மூலம் தற்போது ரூ.1,949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த சிலிண்டர் ரூ.100 விலை உயர்ந்து ரூ.2,021 ஆக இருந்தது.
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சமையல் கியாஸ் விலை குறைக்கப்படவில்லை. கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்ட அதே விலையே தற்போது இந்த மாதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை தலைநகர் டெல்லியில் ரூ.899.50-ம், கொல்கத்தாவில் ரூ.926 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.915.50-க்கு விற்கப்படுகிறது.