இன்றைய தலைமுறையினர் பலர் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த நரைமுடியை மறைக்க சிலர் கெமிக்கல் கலந்த டை பயன்படுத்தினாலும், தலைமுடி பிரச்சனைகள் வரும் என்பதால் சிலர் தங்களின் தலைமுடிக்கு ஹென்னாவை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அப்படி ஹென்னா பயன்படுத்தும் பலருக்கு அதை சரியான வழியில் பயன்படுத்த தெரியவில்லை. இதனால் தலைக்கு ஹென்னா போட்டும், அதை அலசிய பின் பலரது தலைமுடி இன்னமும் நரைத்து தான் காணப்படுகின்றன.ஹென்னா பயன்படுத்தும் போது பலரும் செய்யும் சிறு தவறுகள் தான் அந்த தவறுகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தயிருடன் சேர்ப்பது
தலைக்கு ஹென்னா போடும் போது, அதில் ஏதாவது கலந்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்று பலர் நினைப்பதுண்டு. அதனால் சில சமயங்களில் ஹென்னாவை ஊற வைக்கும் போது, அதில் சிலர் தயிரை சேர்த்துக் கொள்கிறார்கள். இப்படி தயிரை சேர்ப்பதால், அது எதிர்பார்க்கும் பலனைத் தராது. ஏனெனில் ஹென்னாவுடன் தயிரை சேர்க்கும் போது, அதில் உள்ள புரோட்டீன்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்கி, அதன் காரணமாக முடிக்கு புரோட்டீன் கிடைக்காது. ஆகவே இத்தவறை செய்யாதீர்கள்.
போதுமான நேரம் கொடுக்காமல் இருப்பது
ஹென்னாவை நீரில் கலந்த பின் அதை போதுமான அளவு ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்தால் தான் அது தலைமுடிக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். அவசர அவசரமாக நீரில் கலந்து, தலைக்கு பயன்படுத்தினால், ஹென்னாவின் நிறம் முடியில் ஏறாது. எனவே ஹென்னாவை நீரில் கலந்த பின் சுமார் 10 முதல் 12 மணிநேரம் ஊற வைத்து, பின்னர் பயன்படுத்துங்கள்.
எண்ணெய் தடவுவது
பெரும்பாலான மக்கள் ஹென்னா பயன்படுத்தவதற்கு முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவிக் கொள்வார்கள். ஆனால் இப்படி எண்ணெய் தடவுவதால், தலைமுடியில் ஒரு லேயரை எண்ணெய் உருவாக்குகிறது. இதன் காரணமாக ஹென்னாவின் நிறம் முடியில் ஒட்டாமல் இருக்கும். ஆகவே உங்கள் முடியின் நிறம் மாற வேண்டுமென்று நினைத்தால், எண்ணெய் தடவுவதை நிறுத்துங்கள்.
சாதாரண நீரில் ஊற வைப்பது
ஹென்னாவை சாதாரண நீரில் பயன்படுத்தினாலும் தலைமுடியில் நிறம் ஒட்டுவதில்லை என்று பலர் கூறுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் சாதாரண நீருக்கு பதிலாக காபி அல்லது டீ நீரைப் பயன்படுத்தலாம். அதுவும் காபி அல்லது டீ தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டி அந்நீரால் ஹென்னாவை பேஸ்ட் செய்து ஊற வைக்க வேண்டும்.













































