பிந்திய செய்திகள்

தீப்பெட்டி ஆலைகள் வரும் 17ம் திகதி வரை நிறுத்தம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டதில் 50 முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ரூ.1-க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை ரூ.2-ஆக உயர்த்தினர். இது ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்க தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கினர்.

இதையெடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை 300 ரூபாயில் இருந்து 350 ஆக உயர்த்த முடிவு செய்தனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த விலை நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 31-ந்தேதி கோவில்பட்டியில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து தீப்பெட்டி மூலப்பொருட்கள் அதிகரித்து வருவதால் பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் 6-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, 6 லட்ச தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts