உயர்தர பரீட்சை காலப்பகுதியில் மின் வெட்டை அமுல் படுத்தவேண்டாம் என சம்பந்தப்பட்ட பிரிவினர்களுக்கு அறிவித்திருக்கின்றோம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்
இலங்கை மின்சாரசபைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் டீசல் வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு போன்ற காரணங்களால் நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்த மின்சாரசபை ஆலோசித்து வருகின்றது.
இந்நிலையில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிலிக்கையில், நாட்டில் மின் வெட்டு அமுல் படுத்தப்போவதாக ஒருசிலர் தெரிவித்து வந்தாலும் அதுதொடர்பில் எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. என்றாலும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் lமார்ச் மாதம் 5ஆம் திகதிவரை இடம்பெற இருக்கின்றது.
இந்த காலப்பகுதியில் மின் வெட்டு மேற்கொள்ளக்கூடாது என சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தி இருக்கின்றேன். அதனால் பரீட்சை காலப்பகுதியில் மின் வெட்டு இடம்பெறாது என நாங்கள் நம்புகின்றோம்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற இருந்த உயர்தர பரீட்சை மாணவர்களின் நலன் கருதி பிற்போடப்பட்டது. தற்போது பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. பரீட்சை பெறுபேறுகளையும் கடந்த காலங்களையும்விட குறைந்த காலத்துக்குள் வெளியிட எதிர்பார்க்கின்றோம்.
பரீட்சை பெறுபேறு தாமதிப்பதையும் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதை தாமதிப்பதையும் தடுத்துக்கொண்டால், மாணவர்கள் கல்வி கற்கும் காலம் வீணாவதை பாதுகாத்துக்கொள்ளலாம். அதற்கான நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
எனவே பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின் வெட்டு இடம்பெறாது என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. திடீர் மின் துண்டிப்புகள் இடம்பெற்றாலும் அதனை விரைவாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கின்றோம் என்றார்.