தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்சவினரிடம் பொருட்களின் விலைகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட அமைதியான நாட்டையே தான் கையளித்தேன் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது சில கடைகளில் பனடோல் மாத்திரையை கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் மாத்திரமல்லாது சமையல் எரிவாயு, பசளை தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் காரணமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் குறித்து தான் மட்டுமல்ல முழு நாடும் வெறுப்படைந்துள்ளது.
இப்படியான கூட்டணிகள் அமைக்கப்படுவதும் அவை சரிவதும் சஜகமானது.
அத்துடன் எதிர்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடாது.
இதற்காக எதிர்வரும் தேர்தல்களை அடிப்படையாக கொண்டு தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தை கவிழ்கும் சூழ்ச்சிகள் இன்னும் உருவாகவில்லை.
முன்னாள் அரச தலைவரின் தலைமையின் கீழ் உள்ள வெற்றிலை சின்னத்தை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த முன்னணியின் ஊடாக எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் நோக்கில் அதனை மீள் உருவாக்கம் செய்து வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக அமைச்சர் மகிந்த அமரவீர கடமையாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.