நேற்று(2) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனத்தில் வைத்து ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவத்தையடுத்தே அரச தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இராஜாங்க அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு இதுவரை வெளியிடப்படவில்லை.
இராஜாங்க அமைச்சர் நேற்றிரவு தனது மகனை ராகம காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக, இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ டுபாயிலிருந்து எத்தனோல் வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட முனையத்திற்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் விசேட விசாரணைகளை மேற்கொண்டு அரச தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.