நேற்று (07) பிற்பகல் வவுனியாவில் பட்டப்பகலில் வீடொன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம், மாடசாமி கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர்கள், உறவினர் ஒருவரின் மலரஞ்சலி நிகழ்வுக்கு காலை சென்றுள்ளனர்.
இதையறிந்த திருடர்கள் சூரிய வெளிச்சத்தில் சுவர் வழியாக வீட்டுக்குள் நுழைந்து மாடிப்படிகளில் ஏறி வீட்டின் மேற்கூரைக்கு சென்று சமையல் அறையில் குழி தோண்டி மேற்கூரையை உடைத்துள்ளனர்.
நகைகளை தேடுவதற்காக வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்ட மர்மநபர்கள், வீட்டில் இருந்த 4 பவுன் நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கதவை திறந்து விட்டு தப்பியோடினர். பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்ற வீட்டார் வீட்டை திறந்த போது அங்கு பொருட்கள் பரவிக் கிடந்ததுடன், சமையலறை கூரை உடைக்கப்பட்டும், கதவு திறக்கப்பட்டும் இருந்ததை அவதானித்துடன் நகை மற்றும் பணம் திருடப்பட்டு இருந்தமையையும் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவர்கள் ஊடாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ் ஜெயக்கொடி தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சட்ட வைத்திய பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.