எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa)
உயிர்த்த ஞாயிறு தினத்தில் விடுத்த அறிக்கையில்,“மனித குலத்திற்கு விடுதலையின் வழியை போதித்த இயேசு நாதர், மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக சிலுவையில் உயர்த்தப்பட்ட நாளான உயிர்த்த ஞாயிறு இன்று(17) அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலகத்தில் 220 கோடி வரையிலான கத்தோலிக்க பக்தர்கள் யேசுபிரானின் மறைவை நினைவுகூர்ந்து, புனித புதன் கிழமை முதல் 40 நாட்களாக உபவாசம், அன்னதானம் மற்றும் நற்கருணை ஆராதனைகள் உள்ளிட்ட மத வழிபாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டு, உபவாச காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றதுடன், அதனைத் தொடர்ந்து யேசுபிரானின் மறைவை நினைவுக்கூரும் உயிர்த்த ஞாயிறு பிறக்கிறது.
புனித வேதத்தின் படி, மீள் எழுதலையும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை முறைக்கான எதிர்பார்ப்புகளையும் உயிர்த்த ஞாயிறு மூலம் இறைவன் ஏற்படுத்துகின்றான். இது கிறிஸ்துவின் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி சில தேவாலயங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மிகுந்த அனுதாபங்கள் நிறைந்த நினைவை இந்த தருணத்தில் நினைவுக்கூருவோம்.
இதுவரை வரலாற்றில் இந்த நாட்டினுள் மிலேச்சத்தனமான தாக்குதல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஆகும். அந்த தாக்குதலின் பயங்கரமான நினைவுகள் இன்னும் இந்நாட்டிலுள்ள அனைவரின் மனதிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும்,அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது நாம் ஆரம்பத்தில் இருந்து எடுத்த நிலைப்பாடாகும்.இது ஒருபோதும் மாறாத நிலைப்பாடாகும்.தாக்குதலை நடத்தியவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் என்று நேரடியாக அறிவிக்க ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் நிபந்தனையின்றி முன்வருவோம்.
அந்த கோழைத்தனமான தாக்குதல் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாக வெறுப்புள்ளதுடன் அந்த கோழைத்தனமான தாக்குதல்களின் அதிர்ச்சி இன்னும் நம் இதயங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பலரின் உயிரையும், இன்னும் சிலரது உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க செய்த உயிர்த்த ஞாயிறு கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
அந்த கொடூர தாக்குதலின் ஊடாக பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதல்தாரிகள், அவர்களை வழிநடத்தியவர்களின் கொடூரமான நோக்கங்கள் எதுவாக இருப்பினும், அது மனிதகுல வரலாற்றில் கோழைத்தனமானதும் மிலேச்சதனம் மற்றும் தீய நோக்கமும் ஆகும். தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவது கட்டாய நடவடிக்கையாகும். பொய்யை சாக்காக வைத்து உண்மையை மறைக்க முடியாது.சட்டத்தின் முன்பும் இயற்கையின் முன்பும் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
“இறைவனுடைய ஆலயத்தை இடிப்பவன் இறைவனால் அழிக்கப்படுவான், ஏனென்றால் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது, இறை ஆலயம் இறைவனுடையது.” என புனித பவுல் ஆண்டகை கூறியுள்ளார்.
நெருக்கடியை உருவாக்கி அதன் மீது ஆட்சி அதிகாரம் பெற்ற எவராலும் அந்த அதிகாரத்தை தக்கவைக்க முடியாது என்பதை இயற்கை பல முறை நிரூபித்துள்ளது. தற்போது நிரூபனமாகிக்கொண்டிருப்பது அதன் நிதர்சனம் என்பதை நினைவு கூருவோம்” என்றுள்ளது.