தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலையில், இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவினை, அரசாங்கத்தின் 4 முக்கிய புள்ளிகளுக்கு எதிராக பெற்றுக்கொள்ள சட்டத்தரணிகள் குழுவொன்று தயாராகி வருகின்றது.
குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவை ( private plaint) தாக்கல் செய்து இவ்வாறு வெளிநாட்டுப் பயணத் தடையை அவர்களுக்கு எதிராக பெற்றுக்கொள்ள இந்த சட்டத்தரணிகள் குழாம் தீர்மானித்துள்ள நிலையில், பெரும்பாலும் அவ்வழக்குகள் இன்று தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.
குறித்த நான்கு பேருக்கும் எதிராக உள்ள நிதி மோசடி , ஊழல் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
முன்னதாக கடந்த 7 ஆம் திகதி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 18 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் வண்ணம் இந்த தடை உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில் தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை ( private plaint) பரிசீலித்தே, கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவெல, இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.