சிறிலங்காவிற்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக் கூடாதெனவும், கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின் பாதை அமைக்கும் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை இந்திய மத்திய அரசு உணர வேண்டுமென பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இத்திட்டத்தை செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததாகவும், அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டதெனவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா – இலங்கை இடையே மின்சார கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாததால் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா – இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ராமதாஸ், இது தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி இந்திய நலனுக்கும், குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாதகமாக அமையுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.