இன்று இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமாக அரச தலைவர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“சில சகோதர கட்சிகள் தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் தொடர்பான எண்ணக்கருவை அரச தலைவரிடம் முன்வைத்திருந்தனர். இதற்கு மாகாநாயக்கர் தேரர்கள் உட்பட மரியாதைக்குரிய பௌத்த சங்க சபையினர் இவ்வாறான யோசனையை முன்வைத்திருந்தனர்.
இது சம்பந்தமாக மேலும் பல தரப்பினர் இப்படியான யோசனையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக சகோதர கட்சிகளின் பிரதிநிதிகள், அரச தலைவருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் போது தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒத்துழைப்புகளை வழங்க இணங்கியது. இது சம்பந்தமாக அரச தலைவர் முடிவுகளை எடுக்க சந்தர்ப்பத்தை வழங்க நாங்கள் இணக்கத்தை வெளியிட்டுள்ளோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் ரமேஷ் பத்திரன, தானும் கலந்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, எமது கட்சியில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள அணியின் சார்பில் அனுர பிரியதர்ஷன யாப்பா, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் எவரும் பசில் ராஜபக்சவுடன் ஒரே மேடையில் இருந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் எந்த எதிர்ப்பை வெளியிடவில்லை.
தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் சம்பந்தமாக ஏனைய கட்சிகள் இதற்கு முன்னர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.
அது சம்பந்தமான சிறிய கலந்துரையாடலே இன்று நடைபெற்றது” எனவும் எதிரிமான்ன கூறியுள்ளார்.