ஜனாதிபதி மாளிகையில் இன்று (25) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அரச சேவையில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஊழியர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.
இதேவேளை, பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.