பிந்திய செய்திகள்

இலங்கை எதிர் நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியை குறைக்க ஆலோசனை !

இலங்கை சர்வதேச பிணைமுறி கடனை திருப்பிச் செலுத்துவதை தாமதப்படுத்துவது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ (Basil Rajapaks) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெறுவதற்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்துவருவதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஜஸ கூறியுள்ளார்.

மீண்டும் செலுத்த வேண்டிய சர்வதேச பிணைமுறி பத்திரங்கள் உள்ளன. எனவே நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்திவருகின்றோம். அதனை விட எங்களிடம் கடன் வழங்கியவர்களும் உள்ளனர்.

அவர்களின் கடன்களை நாம் மீளச் செலுத்த வேண்டும். அதனால் சில விடயங்களில் மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம் என பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டம் குறித்து அரசாங்கம் சிந்திக்கும் எனவும் அனைத்து விடயங்கள் தொடர்பான பேச்சுக்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நிதி உதவியை பெறப் போவதில்லை என அரசாங்கம் கூறியிருந்த நிலையில், பசில் ராஜபக்ஸவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் முன்மொழியும் என எதிர்பார்க்கப்படும் முன் நிபந்தனைகளுக்கு அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எதிராக கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

எவ்வாறாயினும் அரசாங்கம் கோரும் பட்சத்தில் கடனுதவிகளை வழங்குவது தொடர்பில் பேச்சு நடத்த தாம் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான அதிகாரி மசாஹிரோ நோசாக்கி கடந்த மாதம் கூறியிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts