இலங்கை எதிர்பார்த்த இலக்கை எட்டி உள்ளதாகவும் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நிலவும் சவாலான சூழலுக்கு மத்தியில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 23 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர், “சிறிலங்காவின் வெளிநாட்டு ஏற்றுமதி கடந்த 2020 ஆம் ஆண்டு 12 புள்ளி 3 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது.
எனினும் இந்த ஏற்றுமதியானது கடந்த ஆண்டு 15 புள்ளி 12 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக சரக்கு பொருள் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது. இதன்பிரகாரம் சரக்கு ஏற்றுமதி மூலம் 12.5 பில்லியன் டொலர் நாட்டிற்கு ஏற்றுமதி வருமானமாக கிடைத்துள்ளது
. கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 24 வீத அதிகரிப்பாகும். கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வணிக ஏற்றுமதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை தொட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைந்தமை தொடர்பில் ஏற்றுமதியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்தை செலுத்தும் நடவடிக்கைககளை துரித்தப்படுத்தியமை, தொழிலதிபர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக ஏற்றுமதி துறையில் வெற்றி கிட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.