அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திற்கு நிருமாணிக்கப்பட்ட புதிய பஸ் தரிப்பு நிலையம் உடைப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்ராசி நகரத்தில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் மன்ராசி பாலத்திற்கு அருகாமையில் பஸ்தரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்தன.
இந்த பஸ்தரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்ட காணி தொடர்பாக பிரச்சினைகள் எழுந்ததன் காரணமாக பஸ் தரிப்பு நிலையம் நிர்மாணப்பணிகள் தாமதமாகின.
இந்நிலையில், கடந்த 26 திகதி இரவு குறித்த பஸ் தரிப்பு நிலையம் நிர்மாணிப்பதற்காக போடப்பட்டிருந்த கொங்கிறீட் தூண்கள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டன.
இது குறித்து அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் அக்கரபத்தனை பிரதேசசபைத்தலைவரினால் செய்யப்பட்ட முறைபாட்டுக்கமைய மன்ராசி பிரதேசத்தினை சேர்ந்த ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (30) திகதி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.’