மருந்து இறக்குமதியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திறக்க டொலரை விடுவிக்க முடியாவிட்டால், மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 15% விலையை அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சுடன் இணைந்து 2021 ஒகஸ்டில் மருந்துகளின் விலையை 9% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், அது அமெரிக்க டொலரின் மதிப்பு 176 ரூபாயாக இருந்த காலகட்டம் என்றும் இப்போது டொலர் மதிப்பு ரூ. 230 என்றும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூரில் பரசிட்டமோல் உற்பத்தி செய்வது கடினமாகி வருவதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கட்டுப்பாட்டு விலையான ரூ.200க்கு மருந்து தயாரிக்க நிறுவனங்களால் முடியாததால், நாட்டில் பரசிட்டமோல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.