பிந்திய செய்திகள்

சுமார் 10 அடி பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளாகிய வேன்!

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாத்தறை கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வேனில் 12 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

விபத்து இடம்பெறும் போது அனைவரும் நித்திரையில் இருந்ததாக, அதில் பயணஞ் செய்த ஒருவர் தெரிவித்தார்.

யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவ பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள் வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts