பிந்திய செய்திகள்

17வருடங்களின் பின் மரணதண்டனை விதித்த நபர் விடுதலை !

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தினரால் கடந்த 2000 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஹெரோயின் 4.6 கிராம் வைத்திருந்த குற்றத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பு, சட்டத்தை தவறாக விளங்கியும் நியாயமற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி 17 வருடங்களின் பின்னர் அத்தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளியை விடுவித்து விடுதலை செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான ஆர் குருசிங்க, பி.குமார் ரத்தினம் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

அவருக்கு எதிராக 2001 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

இதன்போது குறித்த நபரை குற்றவாளியாக கண்டுள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், மேல் நீதிமன்றம் குற்றவாளியாக கண்ட குறித்த நபர், அதே ஆண்டு அதாவது 2005 ஆம் ஆண்டு தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளார். எவ்வாறாயினும் அந்த மேன் முறையீட்டு மனு கடந்த 2021 ஆம் ஆண்டே வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே வழக்கின் தீர்ப்பு கடந்த 2022 பெப்ரவரி 23 ஆம் திகதியளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அறிவிக்கப்படும் போதும், மேல் நீதிமன்றம் குற்றவாளியாக கண்ட குறித்த நபர் 17 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாக, அவரை விடுவிக்கும் தீர்ப்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கின் சாட்சியாளர்களாகா பொலிஸ் பரிசோதகர் ஆர்.ரி. தயாநந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் எம்.ஆர். ஜயசுந்தர, பொலிஸ் பரிசோதகர் ரி.பி. சுனில் பத்மசிறி மற்றும் அரசின் பிரதி இரசாயன பகுப்பாய்வாளர் டி.சிறியானி சகுந்தலா தென்னகோன் ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸ் சாட்சியாளர்களின் சாட்சியங்களிடையே பரஸ்பர வேறுபாடு காணப்படும் நிலையிலும் கூட மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதியை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்துள்ளமையை அவதானிக்க முடிவதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில் சாட்சியமளித்துள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டார, பொலிஸ் பரிசோதகர் தயாநந்தவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சுற்றிவளைப்பை முன்னெடுத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக சாட்சியமளித்துள்ளர்.

இருப்பினும் பொலிஸ் பரிசோதகர் தயாநந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் பண்டாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக சாட்சியமளித்துள்ளார்.

தகவலுக்கு அமைய, இரு மாடி வீடொன்றினை சோதனையிட்ட போது, அதன் மேல் மாடியில் பிரதிவாதி இருந்ததாகவும் , அவரின் கீழ் உள்ளாடைக்குள் ஹெரோயின் அடங்கிய பெக்கட் இருந்ததாகவும் பொலிஸார் மேல் நீதிமன்றுக்கு சாட்சியமளித்திருந்தனர்.

இருப்பினும், குறுக்கு விசாரணையின் போது பொலிஸ் சாட்சியாளர் ஒருவர் , பிரதிவாதி அவரது மனைவியுடனேயே கைதாகும் போது இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரு மாடி வீடு, இந்ரானி எனும் வேறு ஒரு பெண்ணுக்கு சொந்தமானது எனவும், வீட்டை சோதனைச் செய்ய அப்பெண்ணிடமே திறப்பை பெற்றுக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் பொலிஸ் விசாரணைகளில், பிரதிவாதியின் மனைவியிடமோ அல்லது இந்ரானியிடமோ ஒரு வாக்கு மூலமேனும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

அத்துடன் குறித்த போதைப் பொருள் இந்ரானி எனும் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் போதைப் பொருள் பிரதிவாதியின் உடமையில் இருந்ததாக பொய்யாக புனையப்பட்டு கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் சாட்சியாளர் ஒருவருக்கு வழக்கின் குறுக்கு விசாரணைகளின் போது பிரதிவாதி தரப்பினரால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை அப்போது அந்த பொலிஸ் சாட்சியாளர் நிராகரிக்கவில்லை என்பதும் மேன் முறையீட்டு நீதிமன்றின் அவதான த்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பிரதிவாதியைக் கைது செய்த இடம் எது என தனக்கு தெரியாது என மற்றொரு பொலிஸ் சாட்சியாளர் சாட்சியமளித்துள்ளார்.

இவ்வாறான பல முன்னுக்கு பின் முரணான விடயங்கள் இருக்கும் நிலையிலேயே மேல் நீதிமன்றம் பிரதிவாதியை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை அளித்து 2005 இல் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி கவனத்தில் கொள்ளாத விடயங்கள் மீது அவதானம் செலுத்தியுள்ள மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி மேல் நீதிமன்ற வழக்கை நிரூபிக்க தவறியுள்ளதாக தீர்மானித்து, மேல் நீதிமன்றால் குற்றவாளியாக காணப்பட்ட நபரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அத்துடன் மேல் நீதிமன்றம் குற்றவாளியாக கருதி அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts