திருமந்திர அரண்மனை மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்கவுள்ளது.
இந்த திருமந்திர அரண்மனையில் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்களும், கருங்கல்லில் பொறிக்கப்பட்ட 3000 திருமந்திர பாடல்களும் பிரதிஸ்டை செய்து வைக்கப்படவுள்ளது.
இதை கொக்கட்டிச்சோலை ஆலயத்திற்கு வழங்கியவர் சிவபூமி அறக்கட்டளை, மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியவற்றின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களாகும்.
சிவராத்திரி தினமான நேற்று இந்த சிவலிங்கங்கள் கொக்கட்டிச்சோலை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரதிஸ்ட்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் சமூக சமயப்பணிகள் பற்றி இலங்கையில் அறியாதவர்கள் மிகச்சிலரே. சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவிற்கு பின்னர் 2008ஆம் ஆண்டிலிருந்து துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக இருந்து அந்த ஆலயத்தை நிர்வகித்து வருகிறார்.
சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவிய அவர் சிவபூமி மனவிருத்தி பாடசாலை, சிவபூமி முதியோர் இல்லம், கீரிமலை உட்பட சில இடங்களில் சிவபூமி மடங்கள், நாவற்குழி திருவாசக அரண்மனை, சிவபூமி அரும்பொருட் காட்சியகம், ஆகியவற்றை நிறுவி அவற்றை திறம்பட நடத்தி வருகிறார்.
சுழிபுரம், நாவற்குழி ஆகிய இடங்களில் விவசாய பண்ணைகளை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறார். ஈழத்தில் உள்ள சிவ ஆலயங்களுக்கும் இவர் உதவி வருகிறார். இவரின் சமய சமூக பணிகளுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது.