சுற்றுலாத்துறை அமைச்சினால் நேற்று முன்தினம் (03) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இது தொற்று நோய்க்கு பின்னரான சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. இவர்களில் அதிகளவானோர் அண்டை நாடான இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஆவர்.
கொரோனா தொற்றுக்கு பின்னர் 2022 பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 96,507 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இந்த வருடம் இன்றைய நாள் வரையில் 185,730 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதுவரையில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளில் 30 வீதமானோர் (29,703) ரஷ்யாவை சேர்ந்தவர்களாவர்.
இதற்கு அடுத்தபடியாக இந்தியாவை சேர்ந்த 25,763 சுற்றுலாப்பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த 18,782 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியைச் சேர்ந்த 13,893 சுற்றுலாப்பயணிகளும் மற்றும் உக்ரைனை சேர்ந்த 13,893 பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி இறுதி வரை ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே அதிகமாக வருகை தந்துள்ளனர்.
இருப்பினும் தற்போது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையினால் ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்து இந்தியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இம் மாதத்தில் முதல் 2 நாட்களிலும் இந்தியாவை சேர்ந்த 1,268 பயணிகளும் ரஷ்யாவை சேர்ந்த 885 பயணிகளும் ஜேர்மனியை சேர்ந்த 774 சுற்றுலாப்பயணிகளும் பிரித்தானியாவை சேர்ந்நத 698 சுற்றுலாப்பயணிகளும், போலந்தை சேர்ந்த 381 சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
தற்பொழுது சுற்றுலாத்துறை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தாலும் இந்தியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் ஆதரவுடன் சுற்றுலாத்துறை முன்னேற்றமடையும் என சுற்றுலாத்துறை சார்ந்த பெரும்பாலான வல்லுனர்கள் கூறுகின்றனர்.