இன்று (16) அதிகாலை டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை டயகம பிரதான வீதியில் எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் தோட்டத்திற்கு சொந்தமான லொறி நேற்றிரவு கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு சென்று டீசல் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு குறித்த தோட்டத்திற்கு செல்லும் போது அக்கரப்பத்தனை டயகம பிரதான வீதியில் ஆகுரோவா பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியில் சென்ற சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கூடுமென ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்தனர்.