கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அமல்படுத்தப்பட்ட 36 மணி நேர ஊரடங்கு இன்று(4) காலை முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நேற்று பதவி விலகினர்.
இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதில், நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனயும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.