பிந்திய செய்திகள்

றம்புக்கண துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக ஊடகங்கள் தகவல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிரா கறம்புக்கண துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

றம்புக்கணயில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறை அத்தியட்சகர் கீர்த்திரத்னவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதெனவும் தெரியவந்துள்ளது.

அதற்கான பிரதான அனுமதியை கண்டி மாவட்டத்தை சேர்ந்த புதிய போக்குவரத்து அமைச்சரே வழங்கியுள்ளதாக காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி ரத்ன என்பவர் மேலதிக காவல்துறைமா அதிபராக காவல்துறை சேவையில் இணைந்துள்ளதாகவும் அவர் பிரதமரின் நெருங்கிய மெய்ப்பாதுகாவலரான மேஜர் நெவில்லின் நெருங்கிய உறவினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட நபர் வீதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் இந்த கொலை சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த நபர் காவல்துறை ஜீப் வண்டிக்கு அழைத்து சென்று அவரது கையடக்க தொலைபேசியை காவல்துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது காவல்துறை அத்தியட்சகர் கீர்த்திரத்ன மிகவும் குடிபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு யாரும் தீ வைக்க முயற்சிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் காணொளியில் தெளிவாக உள்ளது.

ரயில் பாதையை கடக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு அருகில் வைத்து கண்டி அமைச்சர் ஒருவருடன் கீர்த்திரத்ன தொலைபேசியில் உரையாடியுள்ளார். குறித்த அமைச்சர் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

புதிய அமைச்சர், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்கு ஏதாவது செய்யுமாறு கீர்த்திரத்னவிடம் கூறியுள்ளார். தன்னை கவனித்துக் கொண்டால் வேலையை சரியாக செய்து விடுவேன் என கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

அதன் பின்னரே துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது நிராயுதபாணிகளின் அமைதிப் போராட்டம். இந்த போராட்டம் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டதல்ல.

கவிதை எழுதும் கிட்டார் வாசிக்கும் இளைஞர்களின் போராட்டம். அதை வன்முறையாக மாற்றுவது மிகவும் திட்டமிட்ட செயலாகும். காலி போராட்டத்தில் கொழும்பில் இருந்து கும்பல்களை அழைத்து செல்லும் நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

அவர்களை மக்கள் மத்தியில் ஈடுபடுத்தி வன்முறையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts