பிந்திய செய்திகள்

நாடுதழுவிய ரீதியில் நாளை சுகவீன விடுமுறை போராட்டம்

நாளை வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நாளை சுகவீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்தில் பங்கெடுக்குமாறு வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பணிப் பகிஸ்கரிப்புத் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுதழுவிய ரீதியில் 2022.04.28 வியாழக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களால், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படவிருக்கும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாம் கீழ் வரும் விடயங்களை முன்னிறுத்திய வகையில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

மிக நீண்டகாலமாக சம்பள உயர்வின்மை, பதவி உயர்வு ஃ பதவி நிலை தொடர்பான முறையான நடைமுறையின்மை, சீரான கடமைப்பட்டியல் இன்மை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதாரப் பிரச்சினையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

வட மாகாணத்தில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் அனேகமானவர்கள் யாழ் மாவட்டத்திலிருந்தே ஏனைய மாவட்டங்களுக்கு தினசரி சென்று வருகின்றனர். அதன்பால் அவர்கள் தினமும் அதிகளவு பணத்தை செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

போக்குவரத்து செலவுக்கே சம்பளம் போதாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். எனவே எமக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். பொருளாதார நிலை சீராக இல்லாதவரை நாம் மட்டுமல்லாது ஏனைய அனைத்து அரச ஊழியர்களும் பாதிக்கப்படுவர்.

இந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும் வரை எமக்கான வெளிக்களக் கடமைகள் மற்றும் வெளிக்கள கடமை நாட்கள் என்பன மட்டுப்படுத்தப்படல் வேண்டும். மேற்குறித்த கோரிக்கைகளை முன்னிறுத்தி நாம் சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts