பிந்திய செய்திகள்

அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் !

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இலங்கைக்கு தென் திசையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சுமார் 240 கிலோ போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் உத்துழைப்புடன் கடந்த மூன்று வாரங்களாக விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கரையிலிருந்து 630 கடல்மைல் தொலைவில் இலங்கைக்கு தென்திசையில் சர்வதேச கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த சந்தேகத்திற்கிடமான படகை சோதிப்பதற்காக அதனை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்ட போது , அப்படகு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது.

எனினும் தப்பிச் செல்லாத வகையில் தடுப்பதற்காக படகு செல்லும் பாதையை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனையும் பொருட்படுத்தாமல் குறித்த படகு மேலும் தப்பிச் செல்லவே முயற்சித்துள்ளது. எவ்வாறிருப்பினும் அதனை பின்தொடர்ந்து துரத்திச் சென்ற கடற்படையினர் படகு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

பின்னர் குறித்த படகினை சோதனைக்குட்படுத்திய போது அதில் மிகவும் சூட்சுமமாக 220 பைகளில் பொதியிடப்பட்டு 8 உரப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் என்று சந்தேகிக்கப்படும் 240 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ளது எவ்வகை போதைப்பொருள் மற்றும் அளவு தொடர்பில் அவை கரைக்கு எடுத்து வரப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படும் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட கப்பலில் ஏற்பட்ட சேதம் காரணமாக அது கடலில் மூழ்கியுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப்பொருடன் கடற்படை படகினால் கரைக்கு அழைத்துவரப்படுவதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தொடர்பில் சர்வதேச கடற்பரப்புக்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனைகளில் இதுவரையில் சுமார் 4800 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts