ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் புதிய பிரதமராக சற்றுமுன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
இலங்கையில் சமூக மற்றும் அரசியல் மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி புதிய பிரதமரையும், அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை ஒன்றையும் நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார்.
அரச தலைவர் ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 – 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க அரச தலைவராக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனவரி 2015 இல், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் ஆகஸ்ட் 2015 பொதுத் தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.
மீண்டும், 2018 டிசம்பரில், அப்போதைய அதிபர் சிறிசேனா, 2018 ஒக்டோபரில் அவரைப் பதவி நீக்கம் செய்த பின்னர், அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நவம்பர் 2019 இல், ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஆறாவது தடவையாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு பல அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.