சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 18% ஆகக் குறைந்திருந்தது..
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஐந்து மாகாணங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்றும் இன்றும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ, லக்சபான மற்றும் சமனலவெவ நீர்த்தேக்கங்களிலும் மத்திய மலையக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்றும் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக களுகங்கை, ஜின் கங்கை மற்றும் குடா கங்கை ஆகிய ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.